கோலாலம்பூர், ஆகஸ்ட்.04-
உணவை விரயமாக்கக்கூடாது என்று கூறி, பொது நல ஆலோசனை என்ற பெயரில் தாங்கள் கடித்துக் குதறிய கேஃஎப்சி கோழித் துண்டுகளின் எலும்புகளை வீதியில் உறங்கிக் கொண்டு இருக்கும் ஓர் இந்தியருக்குக் கொடுத்து விட்டு, கோழி இறைச்சியின் தோல்களை நாய்களுக்குக் கொடுக்கும் மூன்று சீன இளைஞர்களின் செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பரவலாகக் கண்டனக் கணைகள் குவிந்து வருகின்றன.
எந்த இடத்தில், எப்போது என்று துல்லியாகத் தெரியவில்லை என்ற போதிலும், அந்த மூன்று சீன இளைஞர்கள் வெளியிட்ட காணொளி, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கோழி எலும்புத் துண்டுகளைச் சோற்றில் பொட்டலமாக மடித்துக் கொடுக்கும் அந்த மூன்று இளைஞர்களிடமிருந்து வீடு வாசல் இல்லாத நபர், நன்றிப் பெருக்குடன் பெற்றுக் கொள்வதையும், கோழி இறைச்சியின் தோல்களை அருகில் உள்ள நாய்க்குட்டிகளுக்குக் கொடுப்பதையும் அந்த காணொளி சித்தரிக்கிறது.
பொது நல ஆலோசனை என்ற பெயரில் ஈவு இரக்கமின்றி மனித நேயத்திற்கு முரணாகச் செயல்படும் அந்த மூன்று சீன இளைஞர்கள் தங்களின் செயலுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலைவாசிகள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.








