கோலாலம்பூர், ஆகஸ்ட்.11-
2026 ஆம் ஆண்டு சுக்மா போட்டியில் இந்தியர்களின் பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்பம் ஓர் அங்கமாக சேர்த்துக் கொள்ளப்பட்டது குறித்து மடானி அரசாங்கத்திற்கும், சிலாங்கூர் மாநில அரசுக்கும் ஜெலுத்தோங் எம்.பி. ஆர்எஸ்என் ராயர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
குறிப்பாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி, இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா இயோ, இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங், ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி , சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராய்டு ஆகியோருக்கு நாடாளுமன்றத்தின் இந்திய பிரதிநிதிகள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக ராயர் குறிப்பிட்டார்.
2026 சுக்மா விளையாட்டுப் போட்டியில் இருந்து சிலம்பம் நீக்கப்பட்டது தொடர்பில் எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினர் மடானி அரசாங்கத்திற்கு எதிராக அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தனர்.
குறிப்பாக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், துணையமைச்சர்கள் வாய் திறக்காதது ஏன் என்று கடுமையாகச் சாடி வந்ததாக ராயர் குறிப்பிட்டார்.
நாம் அனைத்து விவகாரங்களிலும் நாடாளுமன்றத்தில் மேஜையைக் குத்தி, பேசிக் கொண்டு இருக்க முடியாது. சில விவகாரங்களை அமைதியான முறையில் பேச்சு வார்த்தை என்ற அணுகுமுறை வாயிலாகத்தான் தீர்வு காண வேண்டியுள்ளது. அதன் அடிப்படையில்தான் கோபிந்த் சிங் இந்த விவகாரத்தை அமைச்சரவை வரை கொண்டுச் சென்றார்.
பாப்பா ராய்டும் சிலாங்கூர் அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று இவ்விவகாரத்திற்கு நல்ல முறையில் தீர்வு கண்டுள்ளார் என்று நாடாளுமன்ற கட்டடத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ராயர் விளக்கினார்.
இந்தச் செய்தியாளர்கள் கூட்டத்தில் ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, பத்து எம்.பி. பி. பிரபாகரன், கிள்ளான் எம்.பி. வீ. கணபதி ராவ், சிகாமட் எம்.பி. யுனேஸ்வரன் மற்றும் சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராய்டு ஆகியோர் கலந்து கொண்டனர்.








