சிங்கப்பூர், மே.31-
மலேசியாவிற்கான கடற்படை தாக்குதல் ஏவுகணை அமைப்பு கொள்முதல் ஒப்பந்தத்தில், நோர்வே அரசாங்கம் ஏற்றுமதி அனுமதியை இரத்து செய்தது இரு நாடுகளுக்கு இடையிலான தூதரக உறவில் நிரந்தர வடுவை ஏற்படுத்தி விட்டதாக தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெற்று வரும் Shangri-La பாதுகாப்பு மாநாடு 2026-இல் கலந்து கொண்ட காலிட் நோர்டின், அங்கு நோர்வே நாட்டின் தற்காப்பு அமைச்சர் Tore O. Sandvik வுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்பேச்சுவார்த்தையில், கொள்முதல் ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டதற்கு, மலேசியா கோரியுள்ள இழப்பீடு குறித்த விவகாரம், Tore O. Sandvik வுடன் விவாதிக்கப்பட்டதாகவும், அவர் அதனை நோர்வே அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுச் செல்ல உறுதியளித்துள்ளதாகவும் காலிட் நோர்டின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மலேசியாவுடன் நோர்வே உண்மையிலேயே தொடர்ந்து நல்லுறவைப் பேணவும், நட்பைப் பாதுகாக்கவும் விரும்பினால், கொள்முதலுக்காக செலுத்திய தொகைக்கான இழப்பீட்டிற்கு, முன்னுரிமை அளித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காலிட் நோர்டின் வலியுறுத்தியுள்ளார்.
இந்த கொள்முதலுக்காக ஏற்கனவே செலுத்தியுள்ள தொகையான 583 மில்லியன் ரிங்கிட் நேரடிச் செலவுகளையும், அத்துடன் மறைமுகச் செலவுகளையும் சேர்த்து, 1 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமாக இழப்பீட்டுத் தொகையை நோர்வே அரசாங்கத்திடம் மலேசியா கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.








