Jan 7, 2026
Thisaigal NewsYouTube
LiKES திட்டம்: 25,000 பயிற்சியாளர்கள் பயன் பெறுவர், விரைவான ஒப்புதல் மற்றும் 2 ஆயிரம் ரிங்கிட் முன்பணம்
தற்போதைய செய்திகள்

LiKES திட்டம்: 25,000 பயிற்சியாளர்கள் பயன் பெறுவர், விரைவான ஒப்புதல் மற்றும் 2 ஆயிரம் ரிங்கிட் முன்பணம்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.06-

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான தொழில்துறை பயிற்சி வேலை வாய்ப்புத் பொருத்த மானிய LiKES திட்டத்தின் மூலம் மொத்தம் 25 ஆயிரம் பயிற்சியாளர்கள் பயனடைய உள்ளனர். இது தொழில்துறை பயிற்சியை வலுப்படுத்தவும், இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தவும் அரசாங்கம் எடுத்துள்ள ஒரு முயற்சியாகும் என்று மனிதவளத் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.

LiKES திட்டத்திற்கான ஒப்புதல் செயல்முறை இதற்கு முன்பு 90 வேலை நாட்களாக இருந்தது. தற்போது அது 14 வேலை நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், தகுதியுள்ள ஒவ்வொரு நிறுவனத்திற்கும் 2 ஆயிரம் முன்பணம் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று டத்தோ ஶ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டம், TalentCorp எனப்படும் Talent Corporation Malaysia Berhad மூலம் 'செலுத்திப் பெறும்' (pay-and-claim) அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக 2024-ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு 30 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த 2 ஆயிரம் ரிங்கிட் முன்பணம், மார்ச் 1 முதல் வழங்கப்படும். TalentCorp விதித்துள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு, நிறுவனங்கள் விண்ணப்பித்த 14 வேலை நாட்களுக்குள் இதனைப் பெற்றுக் கொள்ளலாம்.

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும், புத்தொழில் startup நிறுவனங்களும் இந்த வாய்ப்பை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பயிற்சியாளர்கள் தங்களைத் தாங்களே பயிற்றுவித்துக் கொள்ளவும், திறன்களை வளர்த்துக் கொள்ளவும், வேலைக்குத் தயாராக இது ஒரு நல்ல வாய்ப்பாகும் என்று இன்று TalentCorp தலைமையகத்திற்கு வருகை தந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ ஶ்ரீ ரமணன் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் துணை அமைச்சர் டத்தோ கைருல் ஃபிர்டாவுஸ் அக்பார் கான், TalentCorp வாரியத் தலைவர் Wong Shu Qi மற்றும் TalentCorp குழுமத் தலைமை நிர்வாக அதிகாரி எட்வர்ட் லிங் ஆகியோர் உடனிருந்தனர்.

அதே வேளையில், டிசம்பர் 31 அன்று அரசாணையில் வெளியிடப்பட்ட கிக் தொழிலாளர் சட்டம் அமலாக்கம் விரைவில் இறுதிச் செய்யப்படும் என்று அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் தெரிவித்தார்.

Related News