கோலாலம்பூர், நவம்பர்.15-
சமூக ஊடகங்களில் நேற்று வைரலான காணொளியில் இன்ஸ்பெக்டர் ஷீலா சம்பந்தப்பட்ட மரத்தடி உணவுக்கடை உரிமையாளருடன் ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் சலசலப்பு தொடர்பில் எந்தவொரு குற்றத்தன்மையும் இல்லை என்பதில் போலீஸ் துறை மனநிறைவு கொள்வதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் இன்று அறிவித்துள்ளார்.
கோலாலம்பூர், டாங் வாங்கி போலீஸ் நிலையத்தின் அருகில் உள்ள மரத்தடி உணவகக் கடைக்காரர் ஒருவர், தன்னிடம் நடந்து கொண்ட முறை குறித்து இன்ஸ்பெக்டர் ஷீலா, அந்த நபருக்கு எதிராக கடந்த 13 ஆம் தேதி போலீஸ் புகார் அளித்திருந்தார்.
எனினும் தாங்கள் மேற்கொண்ட விசாரணையில் இந்தச் சம்பவத்தில் எந்தவொரு குற்றத்தன்மையயும் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளதாக டத்தோ ஃபாடில் மார்சுஸ் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
போலீஸ்காரரின் பணியில் இடையூறு விளைவித்தாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் முன்னாள் வர்த்தகக் குற்றச்செயல் தடுப்பு அதிகாரியான இன்ஸ்பெக்டர் ஷீலா, தாம் கைது செய்யப்பட்ட முறை குறித்து புகார் அளிப்பதற்கு டாங் வாங்கி மாவட்ட போலீஸ் நிலையத்திற்குச் சென்ற போது, அந்த போலீஸ் நிலையத்திற்கு வெளியே உள்ள மரத்தடி உணவகக் கடைக்காரர் தம்மிடம் நடந்து கொண்ட முறை குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்திருந்தார்.
இச்சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் ஷீலாவிற்கும் அந்த கடைக்காரருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அந்த கடைக்காரர், நாற்காலி போன்ற ஏதோ ஒரு பொருளைத் தூக்கி ஷீலா மீது வீசுவதைப் போல காட்டும் 43 வினாடிகள் ஓடக்கூடிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
உணவகக் கடைக்காரர் தன்னிடம் நடந்து கொண்ட முறை உட்பட மூன்று வெவ்வேறு சம்பவங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி ஷீலா போலீஸ் புகார் அளித்திருந்தார்.
இந்தப் புகாரின் தொடர்பில் இன்று பதில் அளிக்கையில், இந்தச் சம்பவத்தில் எந்தவொரு குற்றத்தன்மை அம்சமும் இல்லை என்று டத்தோ ஃபாடில் மார்சுஸ் அறிவித்துள்ளார்.








