கோத்தா திங்கி, டிசம்பர்.31-
இணைய வியாபாரம் என்ற ஆசையில் மியன்மாருக்குச் சென்ற 26 வயது Chew என்ற இளைஞர், ஒரு கொடூரமான வேலை வாய்ப்பு மோசடி கும்பலிடம் சிக்கி ஓராண்டு காலம் நரக வேதனையை அனுபவித்த அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சமூக ஊடகங்களில் போலி 'காதல் வசனங்கள்' பேசி நாளொன்றுக்கு 30 பேரை ஏமாற்ற வேண்டும் என்ற இலக்கை அடையத் தவறினால், அந்த கும்பல் இரும்புத் தடியால் அடித்தும், மின்சார அதிர்ச்சி கொடுத்தும், உணவளிக்காமலும் சித்திரவதை செய்ததாக அவர் கண்ணீருடன் விவரித்துள்ளார்.
அங்கிருந்து தப்பிக்க முயன்ற ஐந்து முறையும் பிடிபட்டதால் விலங்கிடப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில், சுமார் 60 மலேசியர்கள் இன்னும் அதே அடிமை முகாம்களில் சிக்கித் தவிப்பதாக அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இன்று கோத்தா திங்கியில் Stulang சட்ட மன்ற உறுப்பினர் Andrew Chen Kah Eng உடன் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளிச்சத்திற்கு வந்த இந்த பயங்கரச் சம்பவம், வெளிநாடுகளில் அதிக சம்பளத்திற்கு வேலை தேடும் இளைஞர்களுக்கு விடுக்கப்பட்ட ஒரு மிகப் பயங்கர எச்சரிக்கையாக அமைந்துள்ளது.








