2021-ஆம் ஆண்டு ஷா ஆலம், தாமான் ஸ்ரீ மூடாவில் ஏற்பட்ட பேரழிவுக்குரிய வெள்ளம் தொடர்பாக 50 குடியிருப்பாளர்கள் தொடர்ந்த வழக்கில், அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசாங்க ஏஜென்சிகள் பொறுப்பேற்க வேண்டும் என்று ஷா ஆலம் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நீதித்துறை ஆணையர் ஷோபா ராஜா துரை ராஜா வழங்கிய தீர்ப்பில், பேரிடர் நிர்வாகம், வானிலை கண்காணிப்பு, வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் வடிகால் நிர்வாகத்தில் ஏற்பட்ட அலட்சியங்களுக்கு எதிராக குடியிருப்பாளர்கள் தங்கள் வழக்கை முழுமையாக நிரூபித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
தேசியப் பேரிடர் நிர்வாக முகமை, மலேசிய வானிலை ஆய்வுத் துறை, சுற்றுச்சூழல் மற்றும் நீர்வள அமைச்சு உள்ளிட்ட மத்திய அரசுத் தரப்புகளுடன், சிலாங்கூர் நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறை, ஷா ஆலம் மாநகர மன்றம் ஆகியவையும் பொறுப்புக்கூற வேண்டும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
கனமழை ஏற்பட்டது மட்டுமே வெள்ளப் பாதிப்புக்கு காரணம் என்று கூறிய நீதிமன்றம், கடவுள் செயல் என்று கூறப்படும் வாதத்தையும் நிராகரித்தது.
50 குடியிருப்பாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. அதனை மதிப்பிடுவதற்கான அடுத்த கட்ட வழக்கு நிர்வாகம் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது.








