ஜோகூர் பாரு, ஆகஸ்ட்.20-
அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்ட ஜோகூர் பாரு மாநகர் மன்றத்தின் இழுவை லோரிக்குத் தீயிட்டு நாசவேலையில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு ஜோகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 5 ஆண்டு சிறைத் தண்டனையும் 6 ஆயிரம் ரிங்கிட் அபராதமும் விதித்தது.
31 வயது வான் முகமட் நஸ்ருல் அஹ்மாட் என்ற அந்த நபர், அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் அவருக்கு மேலும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று நீதிபதி தல்ஹா பாச்சோக் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை காலை 11.07 மணியளவில் ஜோகூர் பாரு வாட்டர்ஃபிரண்ட் பகுதியில் உள்ள வாகனங்கள் தடுத்து வைக்கப்படும் ஜோகூர் பாரு மாநகர் மன்றத்தின் டெப்போவில் 25 ஆயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள அமலாக்க இழுவை லோரிக்குத் தீ வைத்து சேதப்படுத்தியதாக அந்த இளைஞர் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.
நேற்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அந்த நபர், குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து தீர்ப்பை இன்று வழங்குவதாக நீதிபதி அறிவித்து இருந்தார்.








