கோலாலம்பூர், அக்டோபர்.31-
முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோர், மேலும் 3 மாதம் காலம் வரையில் தனது அனைத்துலகக் கடப்பிதழைத் தன் வசம் வைத்திருப்பதற்கு புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.
சிங்கப்பூரில் உள்ள தனது மகளைச் சென்று பார்ப்பதற்கு ஏதுவாக அந்த முன்னாள் பிரதமரின் துணைவியாருக்கு அனுமதி அளிக்கப்படுவதாக மூவர் கொண்ட நீதிபதிகள் குழுவினருக்கு தலைமையேற்ற டத்தோ அஸ்மான் அப்துல்லா தெரிவித்தார்.
தமது வழக்கறிஞர் டத்தோ அக்பெர்டின் அப்துல் காடீர் சார்பில் ரோஸ்மா மன்சோர் செய்து கொண்ட விண்ணப்பத்திற்க துணை பப்ளிக் பிராசிகியூட்டர் பி. சாருலதா எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
இவ்வாண்டு முற்பகுதியில் நான்காவது குழந்தையைப் பிரசவித்து இருக்கும் தனது மகளைச் சிங்கப்பூருக்கு சென்று காண்பதற்கு ஏதுவாக ரோஸ்மா இவ்விண்ணப்பத்தைத் தாக்கல் செய்திருந்தார்.
சரவாக்கில் உள்ள பள்ளிகளுக்கு சூரிய சக்தி மின்விளக்குகள் பொருத்தும் 1.25 பில்லியன் மதிப்பிலான குத்தகையில் லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக 73 வயதுடைய ரோஸ்மாவிற்கு கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதி கோலாலம்பூர் உயர்நீதின்றம் 10 ஆண்டு சிறைத் தண்டனை 970 மில்லியன் அபராதம் விதித்தது.








