கோலாலம்பூர், ஜூலை.21-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பதவி விலக வேண்டும் என்று கோரி, பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு வரும் வேளையில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கு எந்தவொரு பிரேரணையையும் பெறப்படவில்லை என்று மக்களவை சபாநாயகர் டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல் அறிவித்துள்ளார்.
15 ஆவது நாடாளுமன்றத்தின் நான்காவது தவணைக்கான இரண்டாவது கூட்டத் தொடர், இன்று தொடங்கியுள்ள வேளையில் சபாநாயகர், இதனை அறிவித்துள்ளார்.
இம்முறை நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததையும் டான் ஶ்ரீ ஜொஹாரி சுட்டிக் காட்டினார்.
மக்கள் நல்வாழ்வு மற்றும் நாட்டின் மேன்மைக்கு வகை செய்யும் 13 ஆவது மலேசியத் திட்டம் மீதான மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்படவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
எனவே இந்த முக்கியத்துவம் வாய்ந்த மசோதாவை விவாதிப்பதற்கு இரவு வரை மக்களவைக் கூட்டத் தொடர் நடைபெறும் என்று அவர் கோடி காட்டினார்.








