ஜார்ஜ்டவுன், நவம்பர்.14-
பினாங்கு மாநில அரசினால் கடந்த 2011 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட பினாங்கு கடலடி சுரங்கப் பாதைத் திட்டம் ரத்து செய்யப்படவில்லை என்று மாநில முதலமைச்சர் சோவ் கோன் யோவ் தெரிவித்தார்.
கடலடி சுரங்கப் பாதையின் திட்டமிடலில் எழுந்த தொழில்நுட்பச் சிக்கல்களுக்கான சிறந்த தீர்வுகளை ஆராய்வதற்காக இதற்குப் பொறுப்பேற்றுள்ள நிறுவனங்களிடமிருந்து இன்னமும் விளக்கம் பெறப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
சுரங்கப் பாதைத் திட்டம் செயல்படுத்தப்படாத திட்டமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும் அது ரத்து செய்யப்பட்டதாக தாங்கள் எந்த சமயத்திலும் கூறவில்லை. அந்தத் திட்டம் இன்னமும் விவாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் ஆட்சிக்குழு கூட்டத்திலும் இந்தத் திட்டம் தொடர்பாக விளக்கம் கோரப்பட்டதாக சோவ் கோன் யோவ் தெரிவித்தார்.
இன்று பினாங்கு சட்டமன்றத்தில் பெர்சத்து கட்சியின் தெலுக் ஆயர் தாவார் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மி அலாங் கேள்விக்கு பதில் அளிக்கையில் சோவ் கோன் யோவ் இதனைத் தெரிவித்தார்.








