எதிர்வரும் ஜோகூர் மாநிலத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை, அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள ஸ்கூடாய் சட்டமன்ற உறுப்பினர் மரினா இப்ராஹிம், தாம் மலாய் பெரும்பான்மை தொகுதிகளில் போட்டியிட அஞ்சுவதாக கூறப்படும் கருத்துகளை மறுத்துள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் மலாய் பெரும்பான்மை தொகுதிகளில் நேரடி அரசியல் மற்றும் மக்கள்சேவை பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து நேற்று தமது முகநூல் பதிவில் கருத்துத் தெரிவித்துள்ள மரினா, கடந்த 2021 ஆம் ஆண்டில் லாயாங்-லாயாங் தொகுதிக்கு அனுப்பப்பட்டு அங்கு அடிதட்டு மக்களுடன் பணியாற்றியதுடன், ஒரு சமூக மையத்தையும் நிறுவியதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஜோகூர் மாநிலத் தேர்தலில் லாயாங்-லாயாங் தொகுதியில் தாம் போட்டியிடப் போவதாகப் பெரிய எதிர்பார்ப்புகள் நிலவியதையும் மரினா சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே மலாய் பெரும்பான்மை தொகுதிகளில் பணியாற்றிய அனுபவம் இருப்பதால், அத்தகைய தொகுதிகளில் போட்டியிட தமக்கு எந்த அச்சமும் இல்லை என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்.








