அரசாங்கத்தைக் கவிழ்க்க சதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், முன்னாள் நிதியமைச்சர் காலஞ்சென்ற டாயிம் ஜைனுடினின் மனைவி நைமா காலித் மற்றும் அவரது மகன்களிடம் போலீசார் விசாரணை தொடங்கியதைத் தொடர்ந்து, அவர்கள் தலைமறைவாகியுள்ளதாக வெளியான தகவல்களை அவர்களது சட்ட நிறுவனம் மறுத்துள்ளது.
டாயிம் குடும்பத்தாரின் சார்பாக இவ்வழக்கில் ஆஜராகி வரும் சட்ட நிறுவனமான ராஜ் & சச் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், போலீசாரின் கருத்துகள் தங்களது கட்சிக்காரர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்ற தவறான எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும், போலீஸ் அறிவிப்பு கிடைத்த அதே நாளிலேயே வழக்கறிஞர்கள் எழுத்துப்பூர்வமாக பதிலளித்ததாகவும், நைமா காலித் மற்றும் அவரது மகன்கள் எப்போதும் வழக்கறிஞர்கள் மூலம் தொடர்புகொள்ளக்கூடியவர்களாக இருந்து, விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்து வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளையில், நைமாவின் நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஊழியர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த விசாரணை தொடங்கப்பட்டதாகக் குறிப்பிட்ட வழக்கறிஞர்கள், இவ்வழக்கில் குற்றவியல் சட்டம், பிரிவு 124B பயன்படுத்தப்பட்டிருப்பதையும் விமர்சித்துள்ளனர்.
கடந்த மே 26-ஆம் தேதி, புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை சி.ஐ.டி. இயக்குநர் டத்தோ எம். குமார் வெளியிட்ட அறிக்கையில், இவ்வழக்கு விசாரணை தொடங்கப்பட்டது முதல் நைமாவும் அவரது மகன்களும் நாட்டில் இல்லை என குடிநுழைவுத் துறை பதிவுகள் கூறுவதாகத் தெரிவித்துள்ளார்.








