சிபித்தாங், ஆகஸ்ட்.09-
சபாவைச் சேர்ந்த முதலாம் படிவ மாணவி ஸாரா கைரினா மகாதீர் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்திருப்பதைத் தொடர்ந்து அந்த மாணவியின் உடல் இன்று மயானப் புதைக் குழியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது.
சபா, சிபித்தாங்கைச் சேர்ந்த அந்த மாணவியின் தாயார் செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து சட்டத்துறை அலுவலகத்தின் உத்தரவின் பேரில் 13 வயதுடைய மாணவி புதைக்கப்பட்ட மெஸ்போலில் உள்ள தஞ்சோங் ஊபி மயானத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டது.
பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு இடையில் அந்த மாணவியின் உடலைத் தோண்டும் பணி இன்று மாலை 6 மணிக்குத் தொடங்கியது.
சவப் பரிசோதனைக்காக அந்த மாணவியின் பிரேதம், கோத்தா கினபாலு, குயின் எலிஸ்பெத் 1 மருத்துவமனையின் சவக் கிடங்கிற்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது என்று ஸாரா கைரினா குடும்பத்தின் சார்பில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர் ஹாமிட் இஸ்மாயில் தெரிவித்தார்.








