Feb 25, 2026
Thisaigal NewsYouTube
ஏரிக்குள் பாய்ந்தது கார்: தாய் மற்றும் குழந்தைகளைக் காப்பாற்றிய ஏழு இளைஞர்கள்- பிரதமர் பாராட்டு
தற்போதைய செய்திகள்

ஏரிக்குள் பாய்ந்தது கார்: தாய் மற்றும் குழந்தைகளைக் காப்பாற்றிய ஏழு இளைஞர்கள்- பிரதமர் பாராட்டு

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.25-

ரவாங் அருகே ஏரியில் கார் விழுந்து விபத்துக்குள்ளானதில், நீரில் மூழ்கிக் கொண்டிருந்த ஒரு தாயையும் அவரது இரு குழந்தைகளையும் துணிச்சலுடன் மீட்ட ஏழு இளைஞர்களைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பாராட்டியுள்ளார்.

இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், அந்த இளைஞர்களின் செயலால் தான் நெகிழ்ந்து போயிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“ரவாங், குண்டாங் பகுதியில் நேற்று நடந்த விபத்தில், ஏரிக்குள் விழுந்த தாய் மற்றும் இரண்டு குழந்தைகளை விரைவாகச் செயல்பட்டு காப்பாற்றிய இந்த ஏழு இளைஞர்களின் தைரியத்தைக் கண்டு நான் நெகிழ்ச்சியடைந்தேன்," என்று பிரதமர் வர்ணித்துள்ளார்.

தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், பிறர் உயிரைக் காக்க அவர்கள் மேற்கொண்ட தியாகம் மூன்று உயிர்களைக் காப்பாற்றியுள்ளதாக அவர் புகழாரம் சூட்டினார்.

மேலும், பாதிக்கப்பட்ட தாயும் குழந்தைகளும் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் அவர் கூறினார்.

சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவில், அந்த இளைஞர்கள் ஒருவருக்கொருவர் கைகளைப் பிடித்துக் கொண்டு 'மனிதச் சங்கிலி' போலச் செயல்பட்டு, காருக்குள் சிக்கியிருந்தவர்களைப் பத்திரமாக மீட்டது பதிவாகியுள்ளது.

Related News