கோலாலம்பூர், ஜனவரி.24-
சம்மதமின்றி ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் பகிர்வது குற்றமாகும் என்று போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில் எச்சரித்துள்ளார்.
வீட்டு முகவரி, தொலைபேசி எண்கள் மற்றும் குடும்பத் தகவல்கள் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை வெளியிடுபவர்களுக்கு எதிராகக் போலீஸ் துறை தயக்கமின்றி நடவடிக்கை எடுக்கும் என்று ஐஜிபி தெரிவித்தார்.
அனுமதியின்றி ஒருவரின் தனிப்பட்ட தகவல்களைப் பரப்புவது சட்டவிரோதமானது; எந்தச் சூழலிலும் இதை ஏற்றுக் கொள்ள முடியாது. இத்தகைய செயல்கள், தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் பிரிவு 233, தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 130 மற்றும் குற்றவியல் சட்டத்தின் 507E மற்றும் 507F ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரணை செய்யப்படும்.
தனிநபர் தரவு பாதுகாப்பு என்பது அவர்களின் பின்னணி அல்லது கருத்துகளுக்கு அப்பாற்பட்டு அனைவருக்கும் பொருந்தும் என்றும், பழிவாங்குவதற்கோ அல்லது மிரட்டுவதற்கோ இதைப் பயன்படுத்தக்கூடாது என்றும் காலிட் குறிப்பிட்டார்.
டிஜிட்டல் தளங்களில் ஒழுக்க நெறிமுறைகளை கடைப்பிடிக்குமாறு ஐஜிபி பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.








