கோலாலம்பூர், டிசம்பர்.16-
டுரியான் துங்காலில் மூன்று இந்திய இளைஞர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், புக்கிட் அமான் நடத்திய விசாரணை ஆவணங்கள் சட்டத்துறை அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
மூன்று இளைஞர்களின் மரணம் தொடர்பான விசாரணை முறையாகவும், வெளிப்படையாகவும் நடத்தப்படும் என தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இப்ராஹிம் தன்னிடம் உறுதியளித்துள்ளதாகவும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, நேற்று அரசு சாரா இயக்கமான ஆகம அணியின் தலைவர் அருண் துரைசாமி, அந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் சி.ஐ.டி. டத்தோ குமாரின் கட்டுப்பாட்டில் இல்லை என்று குற்றம் சாட்டினார்.
இந்த வழக்கை புக்கிட் அமான் தலைமையகம் தனது கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக் கொண்ட பின்னர் இந்த வழக்கில் முக்கிய குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள மலாக்கா போலீஸ் தலைவர் ஸுல்கைரி முக்தார் மற்றும் அந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நேரடியாக சம்பந்தப்பட்ட எட்டு போலீஸ்காரர்கள் மற்றும் மலாக்கா போலீஸ் துறை ஆகிய மூன்று தரப்பினர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டிய முக்கியக் குற்றவாளிகள் ஆவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த வழக்கை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம், தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்ட பின்னர் மலாக்கா போலீஸ் தலைவர் ஸுல்கைரி முக்தார் எவ்வாறு தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட முடியும் என்றும் அருண் துரைசாமி கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், புக்கிட் அமானின் விசாரணை ஆவணங்கள் சட்டத்துறை அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு மேல் விசாரணைகள் எந்த ஒரு சமரசமும் இன்றி நடத்தப்படும் என்று நாடாளுமன்றத்தில் இன்று அன்வார் உறுதியளித்துள்ளார்.








