மங்கோலியா மாடல் அழகி அல்தான்துயா ஷாரிபு அல்தான்துயா ஷாரிபுவின் படுகொலை தொடர்பில் மரணத் தண்டனையை எதிர்நோக்கியுள்ள அரச மலேசிய போலீஸ் படையைச் சேர்ந்த முன்னாள் போலீஸ்காரர் சிருல் அஸ்ஹர் உமர், அந்த மங்கோலியாப் பெண்ணை கொலை செய்யும்படி உத்தரவிட்ட அந்த பெரும்புள்ளி யார் என்பதை வெளியிட வேண்டும் என்று சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அந்த மாடல் அழகியின் தொலையில் தமக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவதை நஜீப் மறுத்து வந்துள்ளார்.இந்நிலையில் அந்த மாடல் அழகியை கொலை செய்யும்படி முக்கிய அரசியல் புள்ளியிடமிருந்து தாம் ஓர் உத்தரவை பெற்றதாக சிருல் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அந்த முக்கியப் புள்ளி யார் என்பது உட்பட நடந்தவற்றை முழுமையாக அந்த முன்னாள் போலீஸ்காரர் அம்பலப்படுத்த வேண்டும். இவ்விவகாரத்தில் உண்மையும், நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் என்று தமது வழக்கறிஞர் நிறுவனமான ஷாபி அண்ட் கோ மூலமாக வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் நஜீப் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் குடிநுழைவு சட்டத்தின் கீழ் அந்நாட்டில் ஒன்பது ஆண்டு சிறைவாசத்திற்கு பிறகு தற்போது விடுதலையாககியுள்ள சிருல் அசார், அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியை தொடர்ந்து நஜீப் தமது வழக்கறிஞர் மூலம் கருத்துரைத்துள்ளார்.








