Jun 12, 2026
Thisaigal NewsYouTube
1எம்.டி.பி மேல்முறையீட்டு வழக்கில் புதிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்க நஜிப் மனு தாக்கல் / ஜோ லோ மற்றும் ஜாஸ்மின் லூ தொடர்பான தகவல்களை சேர்க்க கோரிக்கை
தற்போதைய செய்திகள்

1எம்.டி.பி மேல்முறையீட்டு வழக்கில் புதிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்க நஜிப் மனு தாக்கல் / ஜோ லோ மற்றும் ஜாஸ்மின் லூ தொடர்பான தகவல்களை சேர்க்க கோரிக்கை

Share:

1எம்.டி.பி ஊழலுடன் தொடர்புடைய அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பணச் சலவை உள்ளிட்ட 25 குற்றச்சாட்டுகளில் தமக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யும் நோக்கில், முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக், அப்பீல் நீதிமன்றத்தில் புதிய ஆதாரங்களை சமர்ப்பிக்க மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவானது கடந்த வாரம் ஷாஃபி & கோ சட்ட நிறுவனத்தால் நீதிமன்ற அதிகாரச் சட்டம் 1964 இன் பிரிவு 61 மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற விதிமுறைகள் சட்டம் 1994 பிரிவு 7ஏ கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

"புதிய ஆதாரங்கள்" என்பது, ஒரு வழக்கு விசாரணை நிறைவடைந்த பிறகு கண்டறியப்படும் தகவல்களைக் குறிக்கிறது.

மேல்முறையீட்டின் போது இத்தகவலைச் சுட்டிக்காட்ட வேண்டுமெனில், 'லாட் வி மார்ஷல்' எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆங்கில வழக்கில் வகுக்கப்பட்ட பல கடுமையான நிபந்தனைகளை அது பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

அந்த வகையில், 73 வயதான நஜீப் ரசாக், தப்பியோடிய நிதியாளர் லோ டேக்ட் ஜோ மற்றும் முன்னாள் 1எம்.டி.பி சட்ட ஆலோசகர் ஜாஸ்மின் லூ தொடர்பான புதிய ஆதாரங்களை தனது மேன்முறையீட்டு விசாரணையில் சேர்க்க கோரியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக தமக்குத் தகவல் வழங்கப்பட்டிருப்பதை துணை அரசு தரப்பு வழக்கறிஞர் அஹ்மத் அக்ரம் காரிப் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு, டிசம்பர் 26-ஆம் தேதி, கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ காலின் லாரன்ஸ் செகுவேரா, 2011 முதல் 2014 -ஆம் ஆண்டு வரை 1எம்.டி.பி நிதியில் இருந்து 2.28 பில்லியன் ரிங்கிட் நிதியானது, நஜிப்பின் அம்பேங்க் கணக்குகளில் செலுத்தப்பட்டதாகக் கூறப்பட்ட வழக்கில் நஜிப்பை குற்றவாளி எனத் தீர்ப்பளித்தார்.

அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான 4 குற்றச்சாட்டுகள் மற்றும் பணச் சலவை தொடர்பான 21 குற்றச்சாட்டுகளில் நஜிப் குற்றம் புரிந்தார் என உறுதிப்பட்ட பின்னர், அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 11.387 பில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related News