கோலாலம்பூர், நவம்பர்.23-
தாய்லாந்து - கம்போடியா எல்லைப் பிணக்கில் மலேசியா தலையிடுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்று ஒற்றுமை அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மலேசியா மத்தியஸ்தராக மட்டுமே செயல்பட்டது, இடைத்தரகராக அல்ல என்று தெளிவுபடுத்திய ஃபாமி, முரண்பட்ட தரப்பினர் பேச முடியாமல் இருக்கும்போது உதவுவதே மத்தியஸ்தரின் பங்கு என்றார்.
மோதல் தரப்பினரான தாய்லாந்து, கம்போடியா ஆகிய இரு நாடுகளும்தான் ஆசியான் தலைவரான மலேசியாவின் உதவியைக் கோரியதாகவும், இது குறித்து ஆரம்பத்திலேயே அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்த குழு தாய்லாந்து அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று கூறிய அவர், அண்டை நாடுகளின் விவகாரங்களில் மலேசியா தலையிடுவதாகக் கூறுவது அடிப்படையற்றது என்றும் கண்டித்தார். இரு நாடுகளும் தீர்மானித்த நிபந்தனைகளின் அடிப்படையில் மட்டுமே போர் நிறுத்தமும் சமாதான ஒப்பந்தம் கையெழுத்தானது என்றும், இதில் மலேசியா தலையிடவில்லை என்றும் அவர் நாட்டின் நடுநிலை நிலைப்பாட்டை வலியுறுத்தினார்.








