Dec 29, 2025
Thisaigal NewsYouTube
1எம்டிபி தீர்ப்பு: நிறுவன சீர்திருத்தங்களுக்கான காலம் கனிந்து விட்டது - கோபிந்த் சிங்
தற்போதைய செய்திகள்

1எம்டிபி தீர்ப்பு: நிறுவன சீர்திருத்தங்களுக்கான காலம் கனிந்து விட்டது - கோபிந்த் சிங்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.29-

ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக ஜசெக, எப்போதும் உறுதியாக நிற்கும் என்று இலக்கவியல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.

1எம்டிபி ஊழல் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததில் இருந்து, அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், பல சவால்களையும் சட்டப் போராட்டங்களையும் எதிர்கொண்டு இந்த உண்மையை நிலைநாட்டியுள்ளதாக கோபிந்த் சிங் சுட்டிக் காட்டினார்.

சுமார் 7 ஆண்டுகள் நீடித்த விரிவான விசாரணைக்குப் பிறகு வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு, குற்றத்தின் தீவிரத்தன்மையை உணர்த்துவதாக அவர் கூறினார். இத்தகைய கடும் குற்றங்கள் ஒரு போதும் எளிதாக எடுத்துக் கொள்ளப்படாது என்பதையும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதையும் இந்தத் தண்டனை உலகிற்குத் தெளிவுபடுத்தியுள்ளது.

1எம்டிபி ஊழல் என்பது வெறும் குற்றவியல் வழக்கு மட்டுமல்ல, அது மலேசியாவின் நிர்வாகக் கட்டமைப்பில் உள்ள பலவீனங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. அதிகார வர்க்கத்தின் உயர் மட்டத்தில் நடந்த இந்தத் தவறுகள், நாட்டின் நிதி நிலைமைக்கும் பொதுமக்களின் நம்பிக்கைக்கும் ஈடு செய்ய முடியாத பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.

மடானி அரசாங்கம் ஏற்கனவே தணிக்கை சட்டம் மற்றும் நாடாளுமன்ற சேவைச் சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. மேலும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் சட்டத்துறை தலைவர் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஆகியோரின் அதிகாரங்களைப் பிரிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது சரியான திசையில் எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான நகர்வாகும் என்று கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.

அதே சமயம், மலாக்கா துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம் மற்றும் சிறைச்சாலையில் கைதிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் போன்ற பல தசாப்த காலப் பிரச்சினைகள் இன்னும் தொடர்வதை அவர் சுட்டிக் காட்டினார். இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, அமலாக்க முகமைகளில் உடனடி மற்றும் ஆழமான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது அவசியமாகிறது.

ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மின் கைது நடவடிக்கைகள் மற்றும் விசாரணை முறைகள் குறித்து எழுந்துள்ள கவலைகளைக் களைவதற்கு, அதன் கண்காணிப்பு வழிமுறைகள் மறுஆய்வு செய்யப்பட வேண்டும். 2026-ஆம் ஆண்டில் இன்னும் வலிமையான நிர்வாகக் கட்டமைப்புகளை உருவாக்கி, எதிர்காலத்தில் 1எம்டிபி போன்ற இழப்புகள் மலேசியாவிற்கு ஏற்படாமல் இருப்பதை உறுதிச் செய்ய வேண்டும் என்று அமைச்சர் கோபிந்த் சிங், இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Related News

1எம்டிபி தீர்ப்பு: நிறுவன சீர்திருத்தங்களுக்கான காலம் கனி... | Thisaigal News