Oct 5, 2026
Thisaigal NewsYouTube

வேலை நேரத்திற்குப் பிறகும் ஊழியர்களுக்குப் பாதுகாப்பளிக்கும் புதியத் திட்டம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வேலை நேரத்திற்குப் பிறகும் ஊழியர்களுக்குப் பாதுகாப்பளிக்கும் புதியத் திட்டம்

கோலாலம்பூர், செப்டம்பர்.29-

ஊழியர்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்கும் திட்டத்தை மலேசியா விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

வேலையிடத்திற்கு வெளியிலும் அலுவலக நேரத்திற்குப் பிறகும் ஊழியர்களுக்குக் காயம் ஏற்பட்டால் புதிய திட்டம் கைகொடுக்கும் என்று பிரதமர் தெரிவித்தார்.

தொலைதூரத்திலிருந்தும் நெகிழ்வான வேலை நேர ஏற்பாட்டின் கீழும் வேலை செய்கின்ற அனைத்து ஊழியர்களுக்கும் அது பொருந்தும். ஊழியர்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்தவும், நாட்டின் சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்தவும் இத்திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தவிருப்பதாக அன்வார் குறிப்பிட்டார்.

வேலைப் பளு என்பது தொழிற்சாலை அல்லது அலுவலகக் கதவுடன் முடிந்துவிடுவது அல்ல என்பதே உண்மை நிலவரம். தற்போதைய நெகிழ்வான வேலை நேர ஏற்பாடுகளின் கீழ் மக்கள் இப்போது எப்படி வாழ்கிறார்கள், வேலை செய்கிறார்கள் என்பதன் அடிப்படையில் இத்திட்டம் பாதுகாப்பை வழங்கும் என்றார் பிரதமர்.

இன்று கோலாலம்பூரில் உலகச் சமூகப் பாதுகாப்புக் கருத்தரங்கு 2025 ஐ, அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்த போது பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

விபத்துகளும் காயங்களும் நேர அட்டவணையின்படி நடப்பதில்லை என்று குறிப்பிட்ட பிரதமர், அரசாங்கத்தின் இந்தத் திட்டம் எல்லா நேரத்திலும் ஊழியர்களுக்குப் பாதுகாப்புத் தர வல்லதாகும் என்றார்.

வேலை நேரத்திற்கு அப்பால் விபத்துகளை எதிர்நோக்கும் ஊழியர்களுக்குப் பாதுகாப்பளிக்கும் சட்டங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிடுவதாக மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் ஏற்கெனவே இவ்வாண்டு பிப்ரவரி மாதம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →