கோலாலம்பூர், செப்டம்பர்.18-
சிங்கப்பூரில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள மலேசியரான பி. பன்னீர் செல்வம் விவகாரத்தில் தலையிட்டு, சிங்கப்பூர் அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்துமாறு பிகேஆர் கட்சியைச் சேர்ந்த 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பன்னீர் செல்வத்தை வேலைக்கு அமர்த்தி கடத்தல் வேலைகளில் ஈடுபட வைத்த மலேசிய போதைப் பொருள் கடத்தல் கும்பல் பற்றி, கடந்த மார்ச் மாதம் பன்னீர் செல்வத்தின் குடும்பத்தினர் காவல்துறை புகார் செய்துள்ளனர் என்று பிகேஆர் எம்பிக்கள் கூறியுள்ளனர்.
பன்னீர் செல்வத்தை சிக்க வைத்த அந்தக் கடத்தல் கும்பல் குறித்து காவல்துறை விரைவில் விசாரணை நடத்தி அதன் அறிக்கையை உள்துதுறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதே வேளையில், பன்னீர் செல்வத்தின் மரணத் தண்டனையை நிறுத்தக் கோரி சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு கடிதம் எழுதுமாறும் உள்துறை அமைச்சரை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.








