கோலாலம்பூர், டிசம்பர்.24-
தனது வீட்டில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், கடந்த நவம்பர் 28-ஆம் தேதி நடத்திய சோதனையின் போது எடுக்கப்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளைப் போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக வெளியிட வேண்டும் என்று வர்த்தகர் டத்தோ ஆல்பெர்ட் தே மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
சோதனையின் போது முகமூடி அணிந்த எஸ்பிஆர்எம் அதிகாரிகள் துப்பாக்கிகளைக் காட்டித் தன்னையும் தனது மனைவியையும் மிரட்டியதாக ஆல்பெர்ட் தே புகார் அளித்துள்ளார்.
சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி கஹார், ஆரம்பக் கட்ட விசாரணையில் துப்பாக்கி காட்டப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்று கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி தெரிவித்திருந்தார்.
போலீசாரின் இந்த கூற்றை மறுத்துள்ள ஆல்பெர்ட் தே, சோதனையின் போது எஸ்பிஆர்எம் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட சிசிடிவி கேமரா பதிவுதான் இந்த வழக்கின் மிக முக்கியமான ஆதாரம் என்றும், அதை வெளியிட்டால் உண்மை தெரிய வரும் என்றும் கூறியுள்ளார்.








