கோலாலம்பூர், ஜனவரி.13-
மலேசியாவில் உள்ள தனது பயனர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யத் தவறியதற்காக, எக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி பரிசீலித்து வருகின்றது.
இதற்கு முன்னர், Telegram நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது போல், X நிறுவனத்திற்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.
இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, X நிறுவனத்தின் Grok செயற்கை நுண்ணறிவு செயலியை, மலேசியாவில் தற்காலிகமாக தடை செய்வதாக எம்சிஎம்சி அறிவித்தது.
பெண்கள் மற்றும் சிறார்களை ஆபாசமாகச் சித்தரிக்கும் Grok செயற்கை நுண்ணறிவு செயலியைத் தடுக்க, போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை X தளம் செயல்படுத்தத் தவறிவிட்டதாக ஒழுங்குமுறை அதிகாரிகள் கூறியதையடுத்து இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.








