ஷா ஆலாம், ஆகஸ்ட்.12-
150சிசி-க்கும் குறைவான வேகச் சக்தியைக் கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கு சாலை வரி, அகற்றப்படுவது விவேகமான நடவடிக்கை அல்ல என்று நினைவுறுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய நடவடிக்கையானது, சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிக்கு எதிர்விளைவையே ஏற்படுத்தும் என்று மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தின் சாலை பாதுகாப்பு மற்றும் பொறியியல் துறை மையத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் லாவ் தேக் ஹுவா கூறுகிறார்.
அரசாங்கத்தின் இந்த உத்தேசத் திட்டம், நாட்டில் சாலைகளின் தரத்தை உயர்த்துவதற்கும், நிர்மாணிப்பதற்கும் தேவையான நிதி வளத்தைக் குறைக்கச் செய்யும் என்று அவர் நினைவுறுத்துகிறார்.
சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு செலவிடப்பட்டு வரும் தொகையில் 150சிசி-க்கும் குறைவான மோட்டார் சைக்கிள்களோட்டிகளும் பெரும் பங்களிப்புக்குரியவர்கள் என்பதையும் முனைவர் லாவ் தேக் ஹுவா தெளிவுபடுத்தினார்.
வாகனங்களுக்குச் சாலை வரி விதிப்பதன் நோக்கமே, அவ்வாகனங்கள் பயன்படுத்தக்கூடிய சாலைகளைப் பராமரிப்பதற்கும், சீர்படுத்துவதற்கும் ஏற்படக்கூடிய செலவினத்தை ஈடு செய்வதற்கு போதுமான நிதி வளத்தை திரட்டுவதாகும் என்பதையும் அவர் விளக்கினார்.








