கோலாலம்பூர் ஜாலான் அம்பாங்கில் நிகழ்ந்த சாலை விபத்தில் தம்பதியர் உயிரிழந்தது தொடர்பாக தன் மீது சுமத்தப்பட்டுள்ள இரு கொலைக் குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்யக் கோரிய 24 வயது கல்லூரி மாணவரின் மனுவை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அரசுத் தரப்பு முன்வைத்த பூர்வாங்க ஆட்சேபனையை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, டேனிஷ் ராமன் குமார் குமரேசன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து விசாரிக்கப்படும் என்று நீதிபதி டத்தோ அஸ்லாம் ஸைனுடின் தெரிவித்தார்.
கடந்த மே 2ஆம் தேதி ஜாலான் அம்பாங் பகுதியில் டொயோட்டா வியோஸ் காரை ஓட்டிச் சென்ற டேனிஷ், மோட்டார் சைக்கிளில் சென்ற 61 வயது துரைசிங்கம், மற்றும் அவரது 56 வயது மனைவி ஏ. மேனகா ஆகியோர் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் இருவரும் உயிரிழந்தனர்.
இந்த வழக்கில் டேனிஷ் மீது குற்றவியல் சட்டம் 302ஆவது பிரிவின் கீழ் இரு கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கொலை வழக்குகள் உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டதால், குற்றச்சாட்டுகளுக்கு அவர் இதுவரை எந்த வாக்குமூலமும் அளிக்கவில்லை.
குற்றச்சாட்டுகள் நடைமுறை ரீதியாகத் தவறானவை என்றும், சட்டவிரோதமான மற்றும் அரசியலமைப்புக்கு முரணானவை என்றும் டேனிஷ் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை. இதையடுத்து வழக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு, பின்னர் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்படும்.








