அலோர் ஸ்டார், டிசம்பர்.19-
கெடா மாநிலத்தில் சூதாட்ட மையங்கள் மற்றும் லாட்டரி விற்பனைக் கடைகளுக்கான வணிக உரிமங்களைப் புதுப்பிக்கப் போவதில்லை என்ற மாநில அரசின் முடிவுக்கு எதிரான சட்டப் போராட்டம், கூட்டரசு நீதிமன்றம் வரை முன்னெடுக்க, கெடா அரசு முடிவு செய்துள்ளது.
கெடா மாநில அரசு மற்றும் மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ முகமது சனுசி முகமது நோர் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை அப்பீல் நீதிமன்றம் கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி தள்ளுபடி செய்தது.
2-1 என்ற பெரும்பான்மை வாக்குகள் அடிப்படையில், கெடா மாநில அரசின் நடவடிக்கை "அரசியலமைப்புக்கு எதிரானது" என்றும், இது கூட்டரசு அரசாங்கத்தின் அதிகார வரம்பிற்குள் தலையிடுவதாகும் என்றும் மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினர் தீர்ப்பு அளித்திருந்தனர்.
சூதாட்ட உரிமங்களை நிர்வகிக்கும் அதிகாரம் மத்திய அரசாங்கத்தின் நிதி அமைச்சுக்கு மட்டுமே உள்ளது தவிர மாநில அரசாங்கத்திற்கு இல்லை என்று நீதிபதிகள் குழுவினர் தெரிவித்தனர்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றம் வரை சென்று போராடப் போவதாக கெடா அரசு முடிவு செய்துள்ளது என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மன்சோர் ஸாகாரியா இன்று அறிவித்துள்ளார்.








