ஷா ஆலாம், டிசம்பர்.23-
Zayn Rayyan Abdul Matin மரணம் தொடர்பில், தனக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி, தாயார் இஸ்மனிரா அப்துல் மனாஃப், தாக்கல் செய்த அப்பீல் மனுவானது நீதிமன்றத்தால் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
இவ்வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட பிரதான ஆவணங்களைப் பார்வையிட்ட அப்பீல் நீதிமன்ற நீதிபதி அஸ்லாம் ஸைனுடின், அவரது மனுவை அனுமதிக்க எந்த சூழ்நிலையும் இடம் கொடுக்கவில்லை எனத் தீர்ப்பளித்தார்.
இதனிடையே, இமனிராவின் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி, மற்றொரு விண்ணப்பமானது அப்பீல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அவரது வழக்கறிஞர் ஹரேஷ் மகாதேவன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி காணாமல் போனதாகக் கூறப்பட்ட Zayn Rayyan-னின் உடல், பின்னர் பிளாக் R, பங்சாபூரி இடாமான் டாமான்சாரா டாமாய் நீரோடை அருகில் கண்டுபிடிக்கப்பட்டது.
Zayn Rayyan உடலில் காயங்கள் ஏற்படும் அளவிற்கு அவனை வேண்டுமென்றே புறக்கணித்ததாக தாயார் இஸ்மனிரா மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆட்டிசமால் பாதிக்கப்பட்ட சிறுவன் Zayn Rayyan னின், மரணத்திற்கு காரணங்கள் கண்டறிய முடியாத நிலையில், இறுதியில், அவனது தந்தையையும், தாயாரையும் போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கில், இஸ்மனிராவும், அவரது கணவர் 30 வயது ஸாயிம் இக்வான் ஸஹாரியும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர்.
இருப்பினும் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் கடந்த ஜுலை 21 ஆம் தேதி இஸ்மனிராவின் கணவர் ஸாயிம் இக்வான் விடுதலை செய்யப்பட்டார்.
இவ்வழக்கில், கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி, தனது தண்டனையை நிறுத்தி வைப்பதற்காக இஸ்மனிரா தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்த நீதிபதி Syahliza Warnoh -வும் அவரது மனுவை நியாயப்படுத்த எந்த ஒரு முறையான காரணமும் இல்லை என்று கூறி நிராகரித்தார்.
இந்நிலையில், காஜாங் சிறையில் தற்போது தண்டனை அனுபவித்து வரும் இஸ்மனிரா, நீதிமன்ற தீர்ப்பின் படி, இரண்டு ஆண்டு நன்னடத்தையில் இருக்க வேண்டும் என்பதுடன் 6 மாதக் காலக் கட்டத்தில் 120 மணி நேரம் சமூகச் சேவையில் ஈடுபட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.








