சிரம்பான், ஜனவரி.16-
சிரம்பான் டோல் சாவடியில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு காரணமாக மூச்சுத் திணறலுக்கு ஆளான மூன்று நபர்களின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நெகிரி செம்பிலான் சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸுரைடா முஹமட் கூறுகையில், பாதிக்கப்பட்டவர்களில் இருவர் துவாங்கு ஜாஃபார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்று வியாழக்கிழமை வீடு திரும்பினர் என்றும், மூன்றாவது நபர் வேறொரு இடத்தில் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட இருவரும் தற்போது நலமுடன் உள்ளனர், அவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
இதற்கிடையில், இப்பகுதியில் காற்றின் தரம் பாதுகாப்பாக இருப்பதாகவும், அளவீடுகள் இயல்பாக உள்ளதாகவும் நெகிரி செம்பிலான் சுற்றுச்சூழல் துறை இயக்குனர் அப்துல் அஸிஸ் பார்மின் தெரிவித்தார்.
கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 2.40 மணியளவில், லாரி ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட 15 அமோனியா வாயு சிலிண்டர்களில் ஒன்றில் கசிவு ஏற்பட்டதாகத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மூத்த அதிகாரி முஹமட் ஃபைஸால் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையான பிளஸ் பாதுகாப்பு அதிகாரி, டோல் சாவடி ஊழியர் மற்றும் லாரி ஓட்டுநர் ஆகியோர் பாதிக்கப்பட்டனர். பிற்பகல் 3.05 மணியளவில் நிலைமை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.








