கோலாலம்பூர், செப்டம்ப்ர்.29-
மடானி அரசாங்கத்தில் தொடர்புத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் ஆன நிலையில் தமது பதவியை ஒரு போதும் தவறாகப் பயன்படுத்தியது கிடையாது என்று டத்தோ ஃபாமி ஃபாட்சீல் இன்று மனம் திறந்தார்.
இதற்கு முன்பு ஓர் அரசாங்கப் பணியாளர் என்ற முறையில் பொதுச் சேவைத்துறையில் தமக்கு அனுபவம் இருந்த போதிலும் ஒரு மலேசியர் என்ற முறையில் தமக்கு வழங்கப்பட்ட பொறுப்பு, கடமையை நாட்டின் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு நிறைவேற்ற வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருந்து வருவதாக டத்தோ ஃபாமி குறிப்பிட்டார்.
தாம் சார்ந்த அமைச்சு அல்லது தாம் தலைமையேற்ற நிகழ்வில் எந்தவொரு திட்டத்திலும் , குத்தகையிலும் ஒரு காசு கூட எடுத்ததில்லை என்றும், கமிஷன் பெற்றது கிடையாது என்றும் டத்தோ ஃபாமி தெரிவித்தார்.
இன்று ஆர்.டி.எம். அங்காசாபூரி, ஆடிடோரியம் ஶ்ரீ அங்காசாவில் செயற்கை நுண்ணறிவு மீதான 2025 ஆம் ஆண்டுக்கான 29 ஆவது பொதுச் சேவைத் துறையின் உளவியல் கூட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அரசாங்கப் பேச்சாளரான டத்தோ ஃபாமி மேற்கண்டவாறு கூறினார்.








