கோலாலம்பூர், அக்டோபர்.25-
47-வது ஆசியான் உச்சி மாநாட்டை முன்னிட்டு நாளை அம்பாங் பார்க்கில் எந்த ஒரு கூட்டத்தையும் நடத்த காவல்துறை அனுமதிக்காது என்று மாநகர காவல்துறைத் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் அமைதியாக ஒன்று கூடி தங்கள் கருத்தை வெளிப்படுத்தும் உரிமையை காவல்துறை முழுமையாக மதிக்கிறது என்று கூறியுள்ள அவர், ஆனால் அம்பாங் பார்க் பகுதி ரேட் ஸோன் ஆக அறிவிக்கப்பட்டுள்ளதால் அவ்விடத்தில் அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகளைக் கொண்ட InterContinental Hotel, அம்பாங் பார்க்கிற்கு மிக அருகில் அமைந்துள்ளது. எனவே, அந்த இடம் எந்த வகையான பொதுக் கூட்டத்திற்கும் பொருத்தமானதல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், டத்தாரான் மெர்டெக்கா அல்லது பாடாங் மெர்போக் போன்ற மாற்று இடங்களில் கூட்டத்தை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் ஃபாடில் மார்சுஸ் தெரிவித்துள்ளார்.








