Dec 4, 2025
Thisaigal NewsYouTube
தேர்ந்தெடுக்கப்பட்டத் துறைகள், துணைத் துறைகளுக்கான வெளிநாட்டு தொழிலாளர்: விண்ணப்பங்களை மீண்டும் திறக்கிறது அரசாங்கம்
தற்போதைய செய்திகள்

தேர்ந்தெடுக்கப்பட்டத் துறைகள், துணைத் துறைகளுக்கான வெளிநாட்டு தொழிலாளர்: விண்ணப்பங்களை மீண்டும் திறக்கிறது அரசாங்கம்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.19-

வெளிநாட்டுத் தொழிலாளர் ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பங்களை மீண்டும் திறக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஆனால் குறிப்பிட்டத் துறைகள் மற்றும் துணைத் துறைகளுக்கு மட்டுமே அந்த விண்ணப்பங்கள் திறக்கப்படுகின்றன என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

தனது உள்துறை அமைச்சுக்கும், மனிதவள அமைச்சுக்கும் இடையிலான கூட்டுக் குழு கூட்டத்திற்குப் பிறகு அவை தொடர்புடைய அமைச்சுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் மூன்று துறைகள் மற்றும் 10 துணைத் துறைகளுக்கு விழுக்காடு வாரியாக விண்ணப்பங்கள் மீண்டும் திறக்கப்படும் என்று சைஃபுடின் குறிப்பிட்டார்.

அந்நியத் தொழிலாளர்களை மீண்டும் எடுப்பதற்கு அங்கீகரிக்கப்பட்ட துணைத் துறைகளான விவசாயம், தோட்டக்கலை, சுரங்கம் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய ஏனைய அனைத்து துணைத் துறைகளும் இதில் அடங்கும் என்று சைஃபுடின் தெரிவித்தார்.

இன்று கோலாலம்பூர், புக்கிட் கியாராவில் உள்ள எம் ரிசோர்ட் & ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அந்நியத் தொழிலாளர்களை மீண்டும் எடுப்பதற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ள மற்றொரு துறை, சேவைத் துறையாகும். சேவைத் துறையின் கீழ் துணைத் துறைகளான மொத்த மற்றும் சில்லறை விற்பனை, கிடங்கு, பாதுகாப்புச் சேவைகள், ஸ்கிராப் மெட்டல் எனப்படும் பழைய உலோகப் பொருள், மறுசுழற்சித்துறை, உணவகங்கள், சலவை நிலையங்கள், சரக்கு கையாளுதல் மற்றும் துப்புரவுச் சேவைகள் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சைஃபுடின் தெரிவித்தார்.

கட்டுமானத் துறைக்கு அரசாங்கத் திட்டங்களுக்கு மட்டுமே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும். அதே நேரத்தில் உற்பத்தித் துறையின் கீழ் மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் புதிய முதலீடுகளை உள்ளடக்கிய வணிகங்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படும்.

“Tom, Dick and Harry” முறையிலான தொழிலாளர் விண்ணப்ப முறை ஒதுக்கீட்டிற்கு இனி அனுமதியில்லை என்பதையும் சைஃபுடின் விளக்கினார்.

Related News