சிப்பாங், அக்டோபர்.08-
கேப்டன் பிரபா என்று அழைக்கப்படும் கிரிமினல் கும்பலைச் சேர்ந்த உறுப்பினர்கள் என நம்பப்படும் 13 பேர், சிப்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
27 வயது M. லாவிந்திரன், 37 வயது M. மேகநாதன், 20 வயது M.தினேஸ், 29 வயது உதயராகு, 31 வயது எம். தினேஸ், 19 வயது S. ஜீவன், 28 வயது J. சங்கரநாராயணன், 35 வயது P. ஜோசுவா, 25 வயது M. தேவேந்திரன், 29 வயது M.நோகார்ஜு, 22 வயது திவாகரன், 26 வயது S. லோகேஸ்வரன் மற்றும் 36 வயது D. விஜயகுமார் ஆகியோரே குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் ஆவர்.
நீதிபதி அஹ்மாட் ஃபுவாட் ஒத்மான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, இந்த 13 பேருக்கு எதிரான குற்றச்சாட்டு தமிழில் வாசிக்கப்பட்டது. இவ்வழக்கு விசாரணை ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதால் 13 பேரிடமும் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பருக்கும், இவ்வாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தங்களைக் கேப்டன் பிரபா என்று கூறிக் கொண்டு இந்த கும்பல் பல்வேறு குற்றஞ்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டு முதல் 20 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் இந்த 13 பேரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
இவ்வழக்கில் மேகநாதன், சங்கரநாராயணன் மற்றும் விஜயகுமார் ஆகியோரைத் தவிர மற்ற பத்து பேரும் தங்கள் சார்பில் வழக்கறிஞர்களை நியமித்திருந்தனர்.
2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்புச் சட்டமான சொஸ்மாவின் கீழ் இந்த 13 பேரும் கைது செய்யப்பட்டதால் அவர்களுக்கு ஜாமீன் அனுமதி மறுக்கப்பட்டது.
எனினும் அந்த 13 பேரை குடும்ப உறுப்பினர்கள் சந்திப்பதற்கு நீதிபதி 10 நிமிடம் கால அவகாசம் வழங்கினார்.
சொஸ்மா சட்டத்தின் கீழ் இந்த 13 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டனர்.
வழக்கு விசாரணை வரும் நவம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.








