கோலாலம்பூர், டிசம்பர்.18-
கூட்டரசு பிரதேச அமைச்சராக ஹன்னா இயோவும், அவரின் துணை அமைச்சராக லோ சூ புயும்- யும் (Lo Su Fui) நியமிக்கப்பட்டதற்கு அம்னோவில் உள்ள இனவாத அரசியல்வாதிகளும், எதிர்க்கட்சியில் உள்ள மதவாத அரசியல்வாதிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில் அவர்களின் புலம்பல் நிறுத்தப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மலேசியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் முன்னேற்றம் என்பது தனிமனிதத் திறமையைவிட மதம் மற்றும் இனத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டால், அந்த நாட்டின் அறிவுசார் வளர்ச்சியைப் பாதிக்கும் என்று கல்விமான்களும், பொருளாதார நிபுணர்களும் எச்சரிக்கின்றனர்.
கூட்டரசு பிரதேச அமைச்சுக்குப் பொறுப்பேற்றுள்ள அமைச்சரும், துணை அமைச்சரும் சீன சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் இந்த வயிற்று எரிச்சல் இனவாதிகளையும், மதவாதிகளையும் கவ்விக் கொண்டு இருக்கிறது என்று அவர்கள் கூறுகின்றனர்.
நாட்டின் இதயமாகக் கருதப்படும் கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் லாபுவான் ஆகிய பகுதிகளை நிர்வகிக்கும் இந்தப் பொறுப்பில், அமைச்சர் மற்றும் துணை அமைச்சர் என இருவருமே சீன சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பது மலாய்க்காரர்கள் குறிப்பாக இனவாதிகளுக்கும், மதவாதிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது நகர்ப்புறங்களில் மலாய் சமூகத்தின் செல்வாக்கைக் குறைக்க வழிவகுக்கும் என்று எதிர்க்கட்சிகளும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன. கூட்டரசு பிரதேச அமைச்சுடன், வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சராக ஜசெக.வை சேர்ந்த ங்கா கோர் மிங் பொறுப்பேற்று இருப்பது மூலம் இரு முக்கிய அமைச்சுக்கள் சீனர்களின் வசம் இருப்பதாக மத மற்றும் இனவாதிகளின் வாதமாகும்.
இரண்டு முக்கிய அமைச்சுக்கள் சீனர்களிடம் சிக்கியிருப்பது, நகர்ப்புறக் கொள்கைகள் மற்றும் நில மேலாண்மை ஆகியவற்றில் ஒரு குறிப்பிட்ட இனத்தின் ஆதிக்கம் அதிகமாகிவிடும் என்று பாஸ் கட்சியும், அம்னோ இளைஞர் பிரிவும் தங்கள் ஆதங்கத்தைத் தெரிவித்து வருகின்றனர்.
கோலாலம்பூர் போன்ற பகுதிகளில் உள்ள மலாய்க்காரர்களின் நில உரிமைகள் மற்றும் நலன்கள் பாதிக்கப்படலாம் என்றும், குறிப்பாக Local Council Elections என்ற ஊராட்சி மன்றத் தேர்தல் போன்ற திட்டங்களை ஜசெக. கொண்டு வர முயற்சிக்கும் என்றும் அவர்கள் அஞ்சுகிறார்கள்.
ஹன்னா இயோ போன்ற தலைவர்கள் இஸ்லாமிய பண்பு நலன்களுக்கு மாறான கொள்கைகளை ஊக்குவிக்கக்கூடும் என்று பாஸ் இளைஞர் அணி போன்ற சில பிரிவினர் விமர்சனங்களை முன்வைத்துள்ளன.
எனினும் இவர்களின் இந்தக் குற்றச்சாட்டுகளைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வன்மையாக மறுத்துள்ளார். அமைச்சரவை நியமனங்கள் இனத்தின் அடிப்படையில் அல்லாமல், திறமையின் அடிப்படையிலேயே செய்யப்படுகின்றன என்று பிரதமர் விளக்கியுள்ளார்.
ஒரு சீன அமைச்சரை நியமிப்பதன் மூலம் மலாய்க்காரர்கள் ஒடுக்கப்படுவார்கள் என்று அர்த்தமல்ல. மாறாக, கோலாலம்பூர் டத்தோ பண்டார் என்று அழைக்கப்படும் மேயர் மற்றும் இதர உயர் அதிகாரிகள் மலாய்க்காரர்களாகவே உள்ளனர். எனவே கோலாலம்பூர் மாநகர் மன்றம் நிர்வாகம் என்பது ஒரு குழுவாகவே செயல்படும் என்றும் பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இனத்தை அடிப்படையாகக் கொண்டு ஒருவரை நிராகரிப்பது என்பது "மிகவும் மோசமானது" என்று பிரதமர் சாடியுள்ளார்.








