Dec 5, 2025
Thisaigal NewsYouTube
ஜம்ரி வினோத் காளிமுத்து , ஃபிர்டாவுஸ் வோங் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இயலாது: போதுமான ஆதாரங்கள் இல்லை என்கிறார் சட்டத்துறை அமைச்சர்
தற்போதைய செய்திகள்

ஜம்ரி வினோத் காளிமுத்து , ஃபிர்டாவுஸ் வோங் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இயலாது: போதுமான ஆதாரங்கள் இல்லை என்கிறார் சட்டத்துறை அமைச்சர்

Share:

கோலாலம்பூர், ஜூலை.22-

சர்ச்சைக்குரிய சமயப் போதகர்களான ஜம்ரி வினோத் மற்றும் ஃபிர்டாவுஸ் வோங் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளை, எந்த சட்ட விதியின் கீழூம் குற்றஞ்சாட்டுவதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று சட்டத்துறைக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் சையிட் இன்று நாடாளுமன்றத்தில் திருவாய் மலர்ந்துள்ளார்.

தனிநபர்கள் மீது பதிவு செய்யப்பட்ட புகார்களைத் தொடர்ந்து போலீஸ் துறை விசாரணையைத் தொடங்கியதையும் அமைச்சர் அஸாலினா குறிப்பிட்டார்.

போலீஸ் துறையின் எந்த விசாரணையாக இருந்தாலும் மேல் நடவடிக்கைக்கு அது தொடர்பான விசாரணை அறிக்கைகள் சட்டத்துறை அலுவலகத்திடம் தாக்கல் செய்வது வழக்கமான நடைமுறையாகும்.

ஆனால், சமயப் போதர்களான ஜம்ரி வினோத் காளிமுத்து, ஃபிர்டாவுஸ் வோங் ஆகியோர் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டுவதற்கு போதுமான ஆதாரங்களை இல்லை என்று சட்டத்துறை அலுவலகம் தெரிவித்து இருப்பதாக அஸாலினா குறிப்பிட்டார்.

இந்து சமயத்தை அவமதித்ததற்காக அந்த சர்ச்சைக்குரிய இரண்டு சமயப் போதர்களுக்கு எதிராக ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸ் புகார்கள் செய்யப்பட்டும், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன் என்று ஜெலுத்தோங் எம்.பி. ஆர்.எஸ்.என் ராயர் இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் அஸாலினா மேற்கண்டவாறு பதில் அளித்துள்ளார்.

அந்த இரண்டு சமயப் போதகர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், குற்றவியல் சட்ட வரம்புகளுக்கு உட்பட்டவை அல்ல என்பதையும் அஸாலினா தெளிவுபடுத்தினார்.

எனினும் எதிர்காலத்தில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டால் இது போன்ற வழக்குகள் மறு விசாரணை செய்யப்படலாம் என்று அஸாலினா உறுதி கூறினார்.

Related News