நேபாள வெள்ளத்தில் பெற்றோர் காணாமல் போன நிலையிலும், இந்திய மாணவி ஒருவர் தனது மருத்துவப் படிப்புக்கான முக்கியத் தேர்வை கண்ணீருடன் எழுதிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தன்வி அன்னம்தேவரா என்ற அந்த மாணவியின் பெற்றோர், கைலாஷ் யாத்திரைக்காக 67 பேர் கொண்ட குழுவுடன் நேபாளம் சென்றிருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர வெள்ளத்துக்குப் பின்னர் அவர்களுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 30ஆம் தேதி நடைபெற்ற NEET-PG மருத்துவத் தேர்வில் தன்வி பங்கேற்றார்.
மூன்று மணி நேரத் தேர்வில் சுமார் ஒன்றரை மணி நேரம் தான் கண்ணீருடன் போராடியதாக அவர் தெரிவித்துள்ளார். கேள்வித்தாளையே சில நேரங்களில் கண்ணீரால் சரியாகப் பார்க்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
“என் பெற்றோருக்காகத்தான் இந்தத் தேர்வை எழுதுகிறேன்… இதைத்தான் என் தந்தையும் விரும்பியிருப்பார்” என்று கண்ணீரை அடக்கிக்கொண்டு மாணவி தன்வி உருக்கமாகக் கூறியுள்ளார்.
ஒவ்வொரு தேர்வுக்கும் முன்பாகவும், மகளுக்கு தைரியம் அளிக்கும் வகையில் அவரது தாயார் வழக்கமாக தயிரும் சர்க்கரையும் கொடுத்து வாழ்த்துவார். ஆனால், இந்த முறை… அந்த அன்பான வாழ்த்தும் இல்லை… ஆறுதல் கூற அருகில் தாயும் இல்லை… தந்தையும் இல்லை.
பெற்றோர் எங்கே இருக்கிறார்கள் என்பதே தெரியாத நிலையில், அவர்களின் நினைவுகளையும் கண்ணீரையும் சுமந்தபடியே தேர்வு அறைக்குள் சென்ற அந்த மகளின் நிலை, காண்போரின் இதயத்தையே நொறுக்கியது.








