ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களைத் தனித்தனி தேதிகளில் நடத்துவதற்குத் தேர்தல் ஆணையம் கூறியுள்ள காரணங்கள் முற்றிலும் அர்த்தமற்றவை என்று வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சரும், ஜசெக துணைத் தலைவருமான ஙா கோர் மிங் சாடியுள்ளார்.
இந்தத் தவறான நிர்வாகத்திற்குப் பொறுப்பேற்று தேர்தல் ஆணையத் தலைவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு குறித்துத் தனது சமூக ஊடகப் பக்கத்தில் அதிருப்தி வெளியிட்டுள்ள அவர், முக்கியக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இரு மாநிலங்களின் சட்டமன்றங்களும் ஒரே காலக்கட்டத்தில் கலைக்கப்பட்டிருக்கும் போது, தேர்தல்களை மட்டும் ஏன் மூன்று வார இடைவெளியில் தனித்தனியாக நடத்த வேண்டும்? என்று ங்கா கோர் மிங் வினவினார்.
பொதுமக்களுக்கு மிகவும் வசதியான நாளான ஞாயிற்றுக்கிழமையைத் தவிர்த்துவிட்டு, வாக்குப்பதிவு நாளை ஏன் சனிக்கிழமையாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
தளவாடச் சிக்கல்கள் மற்றும் போதிய பயிற்சியின்மையைக் காரணம் காட்டி தேர்தலைத் தள்ளி நடத்துவதாகக் கூறும் தேர்தல் ஆணையத்தின் விளக்கம் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என ங்கா கோர் மிங் விமர்சித்துள்ளார்.








