ஈப்போ, டிசம்பர்.26-
சிம்பாங் பூலாய், லோரோங் பூலாய் ராயா 4-இல் நேற்று வியாழக்கிழமை இரவு, இரண்டரை மணி நேரங்கள் தொடர்ச்சியாகப் பெய்த கனமழை காரணமாக, 21 வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.
நேற்றிரவு 10.28 மணியளவில், சிம்பாங் பூலாய் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகளுடன், மலேசிய பொதுத் தற்காப்புப் படையும் இணைந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டன.
குடியிருப்புப் பகுதிக்குச் செல்லும் சாலையானது வெள்ளத்தில் மூழ்கி, கடந்து செல்ல முடியாத அளவுக்கு இருந்ததோடு, வீடுகளிலும் நீர் புகுந்ததாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
புதிய வீட்டு வசதித் திட்டத்தின் காரணமாக வடிகால் அமைப்பு அடைபட்டதே வெள்ளப் பெருக்கிற்குக் காரணம் என்பதையும் மீட்புக் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
இந்நிலையில், சிம்பாங் பூலாய் சட்டமன்ற உறுப்பினர் வோங் சாய் யீயும், ஈப்போ மாநகர் மன்ற அதிகாரிகளும் இன்று பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டனர்.








