கோல குபு பாரு, மே 10-
DAP- க்கு வழிவிட்டால் சிங்கப்பூரைப் போன்று மலாய்க்காரர்கள் தங்களின் அரசியல் அதிகாரத்தை இழக்க நேரிடலாம் என்று இனத் துவேஷ தன்மையிலான மறைமுக மிரட்டலை பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் விடுத்துள்ளார்.
கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் நாளை சனிக்கிழமை நடைபெறும் நிலையில் அத்தொகுதிக்கு உட்பட்ட Batang Kali – யில் பெரிக்காத்தான் நேஷனலுக்கு ஆதரவாக தனது முதலாவது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அந்த மதவாத கட்சித் தலைவர் DAP-யை கடுமையாக சாடினார்.
சிங்கப்பூரில் மலாய்க்காரர்கள் அரசியல் அதிகாரத்தை இழந்ததைப் போன்ற வரலாற்றுத் தவறுகளை சிலாங்கூரில் உள்ள அம்னோ உறுப்பினர்களுக்கும், மலாய்க்காரர்களுக்கும் செய்து விடக்கூடாது என்று நினைவுறுத்தினார்.
மலேசியாவில் இன்று ஆளும் கட்சியில் இருக்கும் DAP, சிங்கப்பூரில் ஸ்தாபிக்கப்பட்ட மக்கள் செயல் கட்சியான PAP- யிலிருந்து உருவானதாகும். நாட்டில் குழப்பங்களை விளைவிக்கும் அளவிற்கு அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு தீவிரவாதம் நிறைந்த கட்சியாகும்.
நாடு சுதந்திரம் பெற்றப் பின்னர் பூமிபுத்ராக்களுக்கான உரிமை அதிகாரத்துவ மொழியாக மலாய், பிற இனத்தவர்களுக்கு குடியுரிமை போன்ற கொள்கைகள் அரசியலமைப்புச் சட்டத்தில் இணக்கம் காணப்பட்டன.
ஆனால், சிங்கப்பூரில் லீ குவான் .இயூவினால் தோற்றுவிக்கப்பட்ட PAP- யின் மறுதோற்றமாக மலேசியாவில் DAP, என்று வேரூன்றியதோ, அன்று முதல் அவர்களின் பிரதான அரசியல் நோக்கம், சந்தடியின்றி அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதாகும்.
இஸ்லாமியர்களின் அதிகாரத்தை அழிக்கும் நோக்கில் DAP காயை நகர்த்தி வருகிறது. அதற்கு வழிவிட்டால் சிங்கப்பூரில் மலாய்க்காரர்கள் அதிகாரத்தை இழந்ததைப் போல் மலேசியாவிலும் ஏற்பட்டு விடும் என்று ஹாடி அவாங் மறைமுக மிரட்டலை விடுத்துள்ளார்.








