நாட்டில் உள்ள ஒவ்வொரு தோட்டத்தை சேர்ந்த தோட்ட தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள் நடப்பு நிலவரங்களை நன்கு தெரிந்து வைத்திருக்கும் பொறுப்பாளராக இருக்க வேண்டும் என்று தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் டத்தோ ஜி.சங்கரன் கேட்டுக்கொண்டார்.
விபத்து மற்றும் வேலை தொடர்புடைய பிரச்சினைகள் எழும் போது அவற்றை எவ்வாறு தீர்ப்பது, அதற்கான வழிமுறைகள் யாவை முதலிய நுணுக்கங்களை தோட்ட தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள் தெரிந்து வைப்பார்களேயானால், அப்பிரச்னைகளுக்கு நல்ல முறையில் தீர்வு காணும் நிலை ஏற்படும் என்று டத்தோ சங்கரன் தெரிவித்தார்.
கெடா, சுங்கை பட்டாணியில் பார்க் அவெனுயு ஹோட்டலில் நடைபெற்ற கெடா - பெர்லிஸ் - பினாங்கு ஆகிய மூன்று மாநிலங்களின் 50 தோட்டங்களைச் சேர்ந்த தொழிற்சங்க பொறுப்பாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகமை அதிகாரப்பூர்வமாக முடித்து வைத்து சிறப்புரை ஆற்றிய டத்தோ ஜி.சங்கரன் மேற்கண்டவாறு சொன்னார்.
தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் ஒவ்வொரு தோட்டத் தொழிலாளரின் நலனை பாதுகாக்கும் வகையில் அதன் திட்டங்கள் வரையப்பட்டுள்ளன. எனவே ஒரு தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர் சம்பந்தப்பட்ட வேலை பிரச்சினை என்றால் தோட்ட நிர்வாகத்துடன் அமர்ந்து பேச்சு வார்த்தை நடத்தும் திறன் பெற்றவராக தோட்ட தொழிற்சங்கப் பொறுப்பாளர்களை உருவாக்குவதில் சங்கத்தின் இது போன்ற பயிற்சித் திட்டடங்கள் பெரும் பங்காற்றி வருகின்றன என்று டத்தோ ஜி. சங்கரன் பெருமிதம் தெரிவித்தார்.
கெடா-பெர்லீஸ்-பினாங்கு மாநிலங்களுக்கான செயலாளர் ஐ.சந்தனதாஸ் மேற்பார்வையில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பயிற்சி முகாமில் சமூக நலன் , சேமநிதி மற்றும் தொழிலாளர்கள் நலன் சார்ந்த விவகாரங்கள் குறித்து அரசாங்கம் துறையை சேர்ந்த அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இந்நிகழ்வில் மாநில தலைவர் கி.கணேசன், தேசிய நிதி செயலாளர் எஸ்.நேமிநாதன் காப்புறுதி அதிகாரி காளிதாஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.








