கோலாலம்பூர், டிசம்பர்.21-
சபா, சரவாக்கில் பணியாற்றும் இளம் மருத்துவர்களுக்கான BIW எனப்படும் ‘வட்டார ஊக்கத் தொகை' 60 விழுக்காட்டிற்கும் மேல் அதிரடியாகக் குறைக்கப்பட்டிருப்பது, அங்குள்ள மருத்துவக் கட்டமைப்பையே சீர்குலைக்கும் என மலேசிய மருத்துவச் சங்கம் எம்எம்ஏ கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே மருத்துவர் பற்றாக்குறையால் தவிக்கும் இப்பகுதிகளில், 960 ரிங்கிட்டாக இருந்த ஊக்கத் தொகை வெறும் 360 ரிங்கிட்டாகக் குறைக்கப்பட்டிருப்பது, உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றும் மருத்துவர்களின் தியாகத்தை இழிவுபடுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது என எம்எம்ஏ தலைவர் டத்தோ டாக்டர் திருநாவுக்கரசு ராஜூ தெரிவித்தார்.
மற்ற துறைகளில் கோடிக்கணக்கான ரிங்கிட் விரயமாவதைச் சுட்டிக் காட்டிய எம்எம்ஏ, வெறும் 4.2 மில்லியன் ரிங்கிட் செலவில் சரி செய்யக்கூடிய இந்தப் பிரச்சினையைத் தீர்க்கத் தவறினால், மருத்துவர்கள் அங்கே பணி பெரிய மறுக்கும் பேராபத்து ஏற்படும் எனத் தெரிவித்துள்ளனர். கடினமான சூழலில் பணியாற்றும் மருத்துவர்களின் மன உறுதியைக் குலைக்காமல், பழைய ஊக்கத் தொகை முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என நிதி அமைச்சுகும் பொதுச் சேவைத் துறைக்கும் அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக டாக்டர் திருநாவுக்கரசு குறிப்பிட்டார்.








