குளுவாங், டிசம்பர்.14-
பண மோசடி வழக்கில் சிக்கியதாக அச்சுறுத்திய தொலைபேசி மோசடி கும்பலிடம் ஏமாந்து, முன்னாள் நிறுவன மேலாளர் ஒருவர் 241 ஆயிரம் ரிங்கிட் இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று டிசம்பர் 13ஆம் தேதி சனிக்கிழமை புகார் அளித்த 47 வயதுடைய பாதிக்கப்பட்டவர், கடந்த நவம்பர் 6ஆம் தேதியன்று தேசிய மோசடி பதிலளிப்பு மையத்திலிருந்து அழைப்பு வந்ததாக குளுவாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி பாஹ்ரேன் முகமட் நோ தெரிவித்துள்ளார்.
அவரின் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்திச் சட்டவிரோதமான தரப்பினர் ஈடுபட்டிருப்பதாகவும், அவர் பெயரில் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மோசடி கும்பல் மிரட்டியுள்ளது. இதன் விளைவாக, நவம்பர் 18 முதல் 27 வரை, பாதிக்கப்பட்டவர் தனது பணத்தை ஏழு வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளார். பணத்தை மீட்க முடியாமல் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பின்னரே, பாதிக்கப்பட்டவர் புகார் அளித்தார். இந்தக் குற்றச்சாட்டு தண்டனைச் சட்டம் பிரிவு 420-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.








