சிக்கன கட்டண விமான நிறுவனமான மைஏர்லைன் தோற்றுநரின் பொருளாதார விவகாரங்களை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் முழுமையாக ஆராய்ந்து வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட அந்த விமான நிறுவனத்தின் 57 வயதுடைய தோற்றுநர், அவரின் 55 வயது மனைவி மற்றும் 26 வயது மகன் ஆகியோர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு மூன்றாவது நாளாக விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது சேவையை தொடங்கிய மலேசிய நிறுவனமான ஏர்லைன், பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த வாரம் தனது சேவையை தற்காலிகமாக முடக்கியுள்ளது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது மற்றும் அதன் முந்தைய பொருளாதார செயல்பாடுகள் குறித்து முழு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் இயக்குநர் டத்தோ ரம்லி முகமட் யூசோப் தெரிவித்துள்ளார்.








