கோலாலம்பூர், ஜனவரி.20-
தேசிய வானிலை சேவையின் விண்வெளி வானிலை முன்னறிவிப்பு மையத்தின் தகவல்படி, கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத மிகப் பெரிய சூரிய கதிர்வீச்சு புயல் இன்று பூமியைத் தாக்குகிறது. சூரியனின் செயல்பாடுகள் தற்போது தீவிரமாக உள்ள நிலையில் கடந்த 2024 முதல் 2026 வரை ஜனவரி 18 ஆம் தேதி சூரியனில் இருந்து வெளியேறிய coronal mass ejection காரணமாக இந்த கடுமையான புவி காந்தப் புயல் ஏற்பட்டுள்ளது. இது 'S4' அளவிலான தீவிரத்தை எட்டியுள்ளது. இது 2003-ஆம் ஆண்டு அக்டோபரில் ஏற்பட்ட புகழ்பெற்ற "Halloween" சூரிய புயலை விட வலிமையானது எனக் கூறப்படுகிறது.
இத்தகைய தீவிரமான சூரிய புயல்கள் விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள்கள், ஜிபிஎஸ் (GPS) மற்றும் ரேடியோ தகவல் தொடர்புகளில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். முன்னதாக 2003-இல் இது போன்ற புயல் ஏற்பட்ட போது, ஸ்வீடனில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த விண்வெளி வீரர்கள் கதிர்வீச்சிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டியிருந்தது. இப்போதும் அது போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
இந்தக் காலக் கட்டத்திக் அமெரிக்காவின் சுமார் 20 மாநிலங்களில் கண்கவர் 'அரோரா' ஒளிகள் தோன்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மலேசியாவின் புவியியல் அமைப்பு முறையைப் பொறுத்தவரை அங்கு இந்த ஒளிக் காட்சிகளைக் காண வாய்ப்பில்லை என விண்வெளி ஆய்வு மைய வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
துருவப் பகுதிகளில் மட்டுமே நிகழக்கூடிய இந்த அபூர்வ நிகழ்வு, மலேசியா போன்ற பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள நாடுகளுக்குப் பரவுவதற்கு வாய்ப்பு குறைவு என்பதே அவர்களின் கருத்தாகும்.








