Oct 1, 2026
Thisaigal NewsYouTube

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: சட்ட அம்சங்களுக்கு ஏற்ப சிறப்புகுழு விசாரணை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: சட்ட அம்சங்களுக்கு ஏற்ப சிறப்புகுழு விசாரணை

புத்ராஜெயா, டிசம்பர்.11-

மலாக்கா, டுரியான் துங்காலில் மூன்று இந்திய இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத் துறையின் சிறப்புக் குழு, சட்ட அம்சங்களுக்கு ஏற்ப விசாரணை செய்து வருவதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்துள்ள புகார் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

விசாரணையின் இலக்கை நிர்ணயிப்பதற்கு முன்னதாக தங்கள் வழக்கறிஞர் மூலமாக மூன்று குடும்பத்தினர் கூறியுள்ள வாக்குமூலங்களை அந்த சிறப்புக் குழு பதிவுச் செய்து வருகிறது. குறிப்பாக சி.ஐ.டி. இயக்குநர் டத்தோ குமார் முத்துவேல் அறிவித்திருப்பதைப் போல் விசாரணையைத் தொடங்குவதற்கு புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளதாக டத்தோ ஶ்ரீ சைஃபுடின் தெரிவித்தார்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கடைசி நேரத்தில் என்ன நடந்தது என்பதை விவரிப்பதாகக் கூறப்படும் அந்த குடும்பத்தினரின் கைவசம் உள்ள ஆடியோ தொடர்பில் விசாரணை நடைபெற்று வருவதாக இன்று புத்ராஜெயாவில் உள்துறை அமைச்சின் மாதாந்திர பேரணியில் கலந்து கொண்ட பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் சைஃபுடின் இதனைக் குறிப்பிட்டார்.

சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு விசாரணை வெளிப்படையாகவும், நிபுணத்துவ அடிப்படையிலும் நடைபெறுவதை அந்தச் சிறப்புக் குழு உறுதிச் செய்யும் என்பதையும் சைஃபுடின் விளக்கினார்.

கடந்த நவம்பர் 24 ஆம் தேதி போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 21 வயது எம். புஷ்பநாதன், 24 வயது டி. புவனேஸ்வரன் மற்றும் 29 வயது ஜி. லோகேஸ்வரன் ஆகியோர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் மற்றும் நான்கு மருத்துவ அதிகாரிகள் என மொத்தம் 7 பேரின் வாக்குமூலத்தை அந்த சிறப்புக் குழு பதிவு செய்து இருப்பதாக பத்திரிகை தகவல்கள் கூறுகின்றன.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →