அலோர் ஸ்டார், டிசம்பர்.14-
மலேசியா-தாய்லாந்து எல்லையில் உள்ள டுரியான் புருங் காட்டுப் பகுதியில் சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம் வரை தோளில் சுமந்து கடத்த முயன்ற மாபெரும் போதைப் பொருள் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி அதிகாலை 4.30 மணியளவில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தைக் கண்ட மலேசிய இராணுவப் படையினர், 37 வயதான தாய்லாந்து நாட்டவர் ஒருவரைக் கைது செய்தனர்.
அவர் வைத்திருந்த ஒன்பது சாக்கு மூட்டைகளில், உறைந்த துரியன், எலி விஷம் என முத்திரையிடப்பட்ட பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 11 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 331 பொட்டல ஷாபு வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக கெடா மாநிலக் காவற்படைத் தலைவர் டத்தோ அட்ஸ்லி அபு ஷா தெரிவித்தார். இந்தச் சதித் திட்டத்தின்படி, ஒவ்வொரு கடத்தல்காரருக்கும் 2 ஆயிரத்து 600 ரிங்கிட் வரை ஊதியம் வழங்க ஒப்புக் கொள்ளப்பட்டதாகவும், தப்பியோடிய மற்ற எட்டு கூட்டாளிகளைப் பிடிக்கத் தாய்லாந்து அதிகாரிகளுடன் இணைந்து விசாரணையைத் தீவிரப்படுத்தவுள்ளதாகவும் அட்ஸ்லி ஷா குறிப்பிட்டார்.








