கோல கிராய், ஆகஸ்ட்.06-
மகன் ஒருவர், தனது தந்தையை நாற்காலியினால் அடித்துக் கொன்ற சம்பவம், கிளந்தான், கோல கிராய் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தலையிலும் உடலிலும் பலத்த காயங்களுக்கு ஆளான 74 வயதுடைய அந்த தந்தை சம்பவ இடத்திலேயே மாண்டார். இச்சம்பவம் இன்று காலை 6.30 மணியளவில் நிகழ்ந்தது.
தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்ட கடும் வாக்குவாதம் பின்னர் கைகலப்பில் முடிந்ததாகக் கூறப்படுகிறது. இதன் தொடர்பில் அந்த முதியவரின் மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
முதியவரின் சடலம், சவப் பரிசோதனைக்காக கோல கிராய், சுல்தான் இஸ்மாயில் பெட்ரா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தை கோல கிராய் மாவட்ட போலீஸ் தலைவர் மஸ்லான் மாமாட் உறுதிப்படுத்தினார்.








