பெட்டாலிங் ஜெயா, ஜனவரி.23-
இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை, இஸ்தானா நெகாரா அரண்மனையின் 2-ஆம் வாயிலில் உள்ள பாதுகாப்புத் தடுப்பில், கார் ஒன்று மோதி விபத்திற்குள்ளான சம்பவத்தில், 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிகாலை 3.30 மணியளவில் நடந்த இச்சம்பவத்தின் போது, சம்பந்தப்பட்ட கார், வாயிலின் பாதுகாப்பு தூணிலும், அதன் தடுப்பிலும் மோதி விபத்திற்குள்ளானது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
இச்சம்பவத்தில், கார் ஓட்டுநருக்கோ அல்லது வேறு நபர்களுக்கோ, காயம் எதுவும் ஏற்படவில்லை என்பதை கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் தலைவர் முஹமட் ஸாம்ஸுரி முஹமட் இசா உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், அந்தக் கார் ஓட்டுநருக்கு நடத்தப்பட்ட சுவாசப் பரிசோதனையில், அவரது இரத்தத்தில் உள்ள ஆல்கஹால் அளவானது 100 மில்லியில் 166 மில்லிகிராம் என கண்டறியப்பட்டுள்ளது.
இது அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறிய அளவில் இருப்பதால், அந்த இளைஞர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்.








