நாட்டின் நான்கு மாநிலங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில், 2 கோடியே 568 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்களைப் போலீஸ் துறை பறிமுதல் செய்துள்ளது. மூன்று போதைப்பொருள் கும்பல்களைச் சேர்ந்த 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்டவற்றில் 210.32 கிலோ மெத்தம்பெட்டமைன், கஞ்சா, கெத்தமின் மற்றும் ஹெராயின் ஆகியவை அடங்கும். இந்தக் கும்பல்கள் உள்நாட்டில் போதைப்பொருள் விநியோகம் செய்வதுடன், வெளிநாடுகளுக்கும் கடத்தி வந்ததாக நம்பப்படுகிறது.
புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசேன் ஓமார் கான், இன்று கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இதனைத் தெரிவித்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருந்தால், சுமார் 19 லட்சத்து 30 ஆயிரம் பேரைப் பாதித்திருக்கக்கூடும் என்றும் அவர் கூறினார். கைது செய்யப்பட்டவர்களில் சிலர் அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் 39B பிரிவின்கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.








